தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட உதவிய தஞ்சை கலெக்டர்

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு, அரசு மூலம் ரூபாய் 6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பசுமை திட்ட வீட்டினை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 10, 2023, 8:46 PM IST

மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட உதவிய தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், திருவிசநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் அண்ணாதுரை - கௌரி தம்பதியினர். இருவருமே போலியாவால் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகள். இவர்களுக்கு 5 வயது மகள் உள்ளார். அண்ணாதுரை இருசக்கர வாகனத்திற்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் வசிக்க, சொந்த இடமில்லாமல், அங்குள்ள அய்யனார் கோயில் குளத்துக்கரையோரம் மின்வசதியற்ற, சிறிய பழுதடைந்த ஓலை குடிசையில் வசித்து வந்தனர்.

மேலும் மனைவி கௌரியும், குடும்ப வருவாய்க்காக, தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி, பிறர் உதவிகளுடன், அதனை குளத்தில் ஊற வைத்து, பின்னர் அதில் கீற்று முடைந்து தன்னம்பிக்கையுடன் விற்பனை செய்து வருகிறார். இவர்களது நிலை குறித்து, ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உடனடியாக அண்ணாதுரை - கௌரி தம்பதியினரை அலைபேசி வாயிலாக அழைத்துப் பேசினார்.

அவர்களது சொந்த வீடு கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களின் கடின உழைப்பு, இவர்களது இயலாமை, குடியிருக்க வீடு இல்லாமை, குடும்பச் சூழல் ஆகியவற்றை முழுமையாக அறிந்தார். முதற்கட்டமாக, திருவிடைமருதூர் வட்ட வருவாய்துறை மூலம் திருவிசநல்லூர் கிராமத்திலேயே, ஆயிரத்து 100 சதுர அடி கொண்ட இலவச வீட்டு மனைப் பட்டாவினை முதற்கட்டமாக வழங்கிட வழிவகை செய்தார்.

தொடர்ந்து பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்குமான ஆணையையும் அவர் வழங்கினார். இருப்பினும், தம்பதியர் இருவரும் மாற்றத்திறனாளிகள் என்பதால் அவர்களால் முன்னின்று வீடு கட்ட வாய்ப்பில்லை என்பதால், ஆட்சியரின் பரிந்துரையின் படி, இதனை முன்னின்று செய்திட, தஞ்சாவூர் மதர் தெரசா அறக்கட்டளை இதனை கட்டி முடித்திட முன்வந்தது.

இதன் பேரில், பசுமை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு நிதியுதவி ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரம், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி ரூபாய் 1 லட்சம் மற்றும் சமூக தொண்டு நிறுவனமான மதர் தெரசா அறக்கட்டளை நிதி ரூபாய் 3 லட்சத்து 40 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் வீடு கட்டி முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அண்ணாதுரை - கௌரி தம்பதியினரின் பசுமை திட்ட புதிய வீட்டினை, தெரசா அறக்கட்டளை தலைவர் சவரிமுத்து தலைமையில், மக்கள் ஆட்சியர் என போற்றப்படும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று, ரிப்பன் வெட்டி, திறந்து வைத்து குத்துவிளக்கினை ஏற்றி பயனாளியின் வாழ்வில் புதிய ஒளியினை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாதுரை - கௌரி தம்பதியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர் சுசீலா உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றத்திறனாளிகள் மற்றும் பெற்றோரை இழந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், அவர்களுக்கு தனியார் அமைப்பு, என்ஜிஓ பங்களிப்புடன் வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 10 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இன்று 11ஆவது பயனாளிகளான அண்ணாதுரை - கௌரி தம்பதியினருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:"யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ளே வை": ஈபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

ABOUT THE AUTHOR

...view details