தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு - பழ.நெடுமாறன் அறிவிப்பு!

Pazha Nedumaran: இந்தியாவில் உள்ள மிக பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை நிலைநாட்டும் வகையில், தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு நடைபெற உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 11:00 PM IST

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அளித்த பேட்டி

தஞ்சாவூர்: உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு 10ஆம் மாநாடு செப்டம்பர் 23, 24 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் நடைபெறும் இம்மாநாட்டில், பல்வேறு தமிழ் அறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் பங்கேற்று தமிழர்களின் தொன்மை வரலாற்று சிறப்பினை எடுத்துரைக்கின்றனர்.

இது குறித்து தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் இன்று (செப் 16) கூறும்போது, “சிந்துவெளி நாகரீக காலம் தொடங்கி, இன்றைக்கு கீழடி நாகரீகம் வரை தொல்லாய்வு தடயங்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றுகின்றனர். இந்தியாவின் வரலாற்றில் மிக தொன்மையானது தமிழர் நாகரிகம் என்பது நிலைநாட்டப்பட்டு வருகிறது.

சிந்துவெளி நாகரீகத்திற்கும், வைகை நாகரிகத்திற்கும் கிட்டதட்ட மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அதுபோல ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் பல்வேறு விதமான ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதையும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். அதுபோல கொற்கையில் அகழாய்வு நடைபெற்று இருக்கிறது.

ஏற்கனவே, சங்க இலக்கியங்களில் கொடுமணம் ஊரைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. இன்றைக்கு அது கொடுமணல் என்று வழங்கப்படுகிறது. அந்த கொடுமணலில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அதனுடைய காலம் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், மக்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மேலும், அதில் வரலாற்றுக்கு முற்பட்ட பல்வேறு தடயங்கள் நமக்கு கிடைத்து இருக்கின்றன.

ஆகவே, இந்தியாவில் உள்ள மிக பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை நிலைநாட்டுவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். மேலும், ஏறத்தாழ உலகத்தின் மிகப் பழமையான நாகரிகங்களான எகிப்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம், சீன நாகரிகம் ஆகியவற்றோடு நமது தமிழர் நாகரிகமும் ஒப்பிடப்படுகிறது.

மற்ற நாகரிகங்கள் எல்லாம் கிட்டத்தட்ட மறைந்து விட்டன. இப்போது கிரேக்கம் இருக்கிறது. ஆனால் கிரேக்க நாகரிகமும், கிரேக்க மொழியும் இன்றைக்கு இல்லை. சீனா பழமையான நாகரிகம் உள்ள நாடு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சீன மொழி இன்றைக்கு இல்லை. மண்டாரின் என்ற மொழியை அவர்கள் பேசுகிறார்கள்.

எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரமிடுகள், மற்றவைகள் எல்லாம் நமக்கு கிடைத்து இருக்கின்றன. ஆனால் எகிப்திய நாகரிகம் இன்று மறைந்து விட்டது. மொழியும் மறைந்து விட்டது. ரோமாபுரியிலும் அதே மாதிரியான நிலைதான். ஆனால், நம்முடைய தமிழ் மொழி மட்டும் அன்றில் இருந்து இன்று வரை, தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மொழியில் பேசினார்களோ, அந்த மொழியில் இன்றைக்கு நாமும், நம்முடைய குழந்தைகளும் பேசுகிறோம்.

எழுத்துக்கள் காலகாலத்திற்கும் மாறும். எல்லா நாட்களிலும், எல்லா மொழிகளிலும் எழுத்து மாற்றங்கள் சில தடவை நடைபெற்று இருக்கின்றன. அப்படி தமிழ் எழுத்துக்கள் மாறி இருக்கின்றனவே தவிர, மொழியில் அடிப்படை மாற்றம் இல்லை. தொல்காப்பியர் வகுத்த இலக்கண நெறியில்தான் இன்று வரைக்கும் நாம் செல்கிறோம்.

மிக தொன்மையான உலக நாகரிகங்களில் இன்றைக்கும் சீரிளமை திறன் குன்றாது, இன்றைக்கும் பேசும் மொழியாக, எழுத்து மொழியாக நம்முடைய மொழியும், அதனுடைய நாகரிகமும் வாழ்கிறது என்பதை நிலை நாட்டுவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்” என தெரிவித்தார். அதில் உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் முருகேசன், பேராசிரியர் பாரி, பொறியாளர் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Locanto app cheating: வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் லோகாண்டோ.. போலீஸ் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details