தஞ்சாவூர் நகரின் சீனிவாசபுரம் பகுதியில் ஜே.ஜே.கோல்டு, ஜே.ஜே.குரூப்ஸ் என்ற பெயரில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நகைக்கடை தொடங்கப்பட்டது. இந்த நகைக்கடையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று நகரின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த விளம்பரங்களை நம்பி ஏரளமான வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தனர். இதனடிப்படையில் உரிமையாளரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று (பிப்.28) கைது செய்யப்பட்டார்.
ஜே.ஜே.குருப்ஸ் என்ற நிறுவனம் பெயரில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பட்டு புடவை வாங்கினால், அதே விலையில் 3 பட்டுப்புடவை இலவசம், ஆரம்ப விலை ரூ.1,800 முதல், ஜே.ஜே.கோல்டு வழங்கும் தங்கம் திருவிழா, வெள்ளி திருவிழா, பழசுக்கு புதுசு ஆஃபர், 100 கிராம் வெள்ளி நகை வாங்குபவர்களுக்கு வெள்ளி மோதிரம் இலவசம், தங்க நகைகளுக்கு செய்கூலி சேதாரம் கிடையாது, சிறப்பு தள்ளுபடி இவ்வாறாக பல விளம்பரகளை நோட்டீஸ்களாக அச்சிட்டு வெளியிடப்பட்டன.
இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களது பணத்தை ஜே.ஜே.குருப்ஸில் செலுத்தி உள்ளனர். இவர்களில் மேலத்திருப்பந்துருத்தியை சேர்ந்த முத்தமிழ் என்ற பெண், ஜே.ஜே.குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் சந்திரனிடம் மாதாந்திர ரிட்டன் டெபாசிட் என்ற மற்றொரு திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்துள்ளார்.