தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 நாள்கள் கரோனா வசம்... பத்திரிகையாளரின் அனுபவ பகிர்வு!

தஞ்சாவூர்: ஈடிவி பாரத்தின் நிருபர் எம். மணிகண்டன் அண்மையில் டெல்லியிலிருந்து சென்னை சென்றபோது கரோனா தொற்றுக்கு ஆளானார். தஞ்சாவூரில் 21 நாள்கள் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த 23ஆம் தேதி பூரண குணமடைந்தார். தொற்று ஏற்பட காரணம், அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம், சமூகத்தால் நடத்தப்பட்ட விதம், குடும்பம், மருத்துவமனை, சக நோயாளிகள் என 21 நாள்களை கடந்துவந்து பெருந்தொற்றை வென்றது ஆகியவை குறித்து பகிர்கிறார்...

corona-virus-infection
corona-virus-infection

By

Published : Apr 24, 2020, 8:30 PM IST

Updated : Apr 25, 2020, 12:01 PM IST

எப்படி போனது 21 நாள்கள்? விவரிக்கிறார் பத்திரிகையாளர் மணிகண்டன்

ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறேன். மார்ச் 28ஆம் தேதி எங்கள் ஊர்த் திருவிழாவுக்கு வர திட்டமிட்டிருந்தேன். ஆனால், 23ஆம் தேதி மதியம், 25ஆம் தேதி நள்ளிரவோடு அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் ஊரடங்கு முடிந்த இரு தினங்களிலேயே இப்படி ஒரு செய்தி வர, தேசம் முழு அடைப்புக்கு தயாராகிறது என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

எனவே, மார்ச் 24ஆம் தேதி ஊருக்குச் செல்ல முடிவெடுத்தேன். அன்று அதிகாலை 3.15 மணிக்கு இண்டிகோ விமானத்தில் சென்னை வந்திறங்கிய நான், அங்கிருந்து ஒரு தனியார் காரில் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்துக்கு மாலை 3 மணியளவில் வந்து சேர்ந்தேன். டெல்லியிலிருந்து வந்ததால் அரசு அறிவுறுத்தல்படி, நானே என்னை 28 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள நினைத்தேன்.

ஆனால், மார்ச் 30ஆம் தேதி லேசான உடல் வலி ஏற்பட்டதால், திருவோணம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குச் சென்று எங்களுடைய வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவதனியிடம் இது குறித்து கூறினேன். அவர் மருந்து கொடுத்து அனுப்பினார். ஆனாலும், ஒரு முறை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. மீண்டும் சுந்தரவதனிக்கு போன் செய்து விவரத்தை கூறினேன். அவரும் பரிசோதனைக்காக ஏப்ரல் 2ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

பரிசோதனை முடிந்து அன்று இரவு வார்டுக்கு சென்றபோது பேரிடியாக, மார்ச் 24ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட இண்டிகோவில் பயணித்த பலருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், அதில் பயணித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பு வந்தது.

ஏப்ரல் 6ஆம் தேதி காலை எனக்கு கரோனா இருப்பதாக தஞ்சை மருத்துவக் கல்லூரியின் மூத்த மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மண்டலம் என்று எங்கள் பகுதியை அறிவித்தார்கள். எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட அடுத்த நாளே எனது 1.5 வயது மகன் உள்பட குடும்பத்தினர் அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு சோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தொற்றில்லை என்றாலும் 14 நாள்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தியே வைக்கப்பட்டிருந்தனர்.

சில நாள்கள் கழித்து நான் மற்றும் பிற நோயாளிகள் அனைவரும் ஒரே கட்டடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். மூன்று நேரமும் சாப்பாடு ஜமாத்திலிருந்து வந்தது. பால், முட்டை, சுண்டல் என மருத்துவமனையிலும் நல்ல கவனிப்பு. அடுத்தடுத்த நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எனக்கு அருகாமையில் ஷேக் அலாவுதீன் என்ற ஓய்வுபெற்ற கல்வியியல் பேராசிரியர் இருந்தார். சார் ஒன்னும் கவலைப்படாதீங்க, நிறைய போலீஸ் படமா பாருங்க, மனசு ஸ்ட்ராங் ஆகிடும் என்றார் அவர்.

21 நாள்களும் அரசியல், சினிமா, இலக்கியம் என்று எல்லோரிடமும் பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன. ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு நம்பிக்கையோடு நாள்களைக் கடத்தினோம். சொந்தபந்தங்கள் போனில் பேச தயங்கியபோது ஜமாத் ஆட்கள் மூட்டை மூட்டையாக உணவும், பழங்களும் கொடுத்து அனுப்பினார்கள்.

நிருபர் எம். மணிகண்டன்

நான் குணமாகிவிட்டேன். காரணம் ஜமாத்திலிருந்து வந்த சாப்பாடும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்களின் கவனிப்பும்தான். உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள் பணி செய்கின்றனர். ஆனால், மருத்துவர்கள் சைமன் ஹெர்குலஸுக்கும் ஜெயமோகனுக்கும் நடந்தது உள்ளிருந்த எங்களை கலங்கச் செய்தது. சில வயதான நோயாளிகள், சார் ஒருவேளை எங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா இப்படி தான் துரத்தியடிப்பாங்களா என்று கண்ணீர் விட்டதும் என்னை கலங்கச் செய்தது.

”நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கிறேன் சார். 2 வயசுல மக இருக்கா. ஏழு நாள் பணி, ஏழு நாள் மருத்துவமனையில குவாரண்டைன். என்ன பண்றது” என்று தனக்கான பிபிஇ ஆடையை சரிசெய்து கொண்டு நகர்ந்தார் அந்த இளம் நர்ஸ். ”மாஸ்க் மட்டும் மாட்டிக்கங்க பிரதர், நான் சடுதியில மாப் போட்றேன்” என்று தூய்மைப் பணியாளர்கள் கனிவு காட்டினர். இவர்களின் அர்ப்பணிப்பு இல்லையென்றால் நான் மீண்டிருப்பது மிகக் கடினம்.

பத்திரிகையாளனாக அங்குமிங்கும் ஓடியாடி பணிசெய்துவிட்டு நான்கு சுவற்றுக்குள் தனித்திருப்பதுமே பெரிய சங்கடம். சில நேரங்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் எழுதுவது, அமேசான் கிண்டிலில் புத்தகம் படிப்பது, ஹாட்ஸ்டார், ப்ரைமில் படம் பார்ப்பது என்று நாள்கள் நகர்ந்தன. முக்கியமாக ஊடகவியலாளர்கள் அளித்த மனோபலம் எழுத்தில் சொல்ல முடியாது. அத்தனை நம்பிக்கை ஊட்டினர். ஈடிவி பாரத் தலைமை செய்தியாசிரியர் பிலால் பட், டெல்லி செய்திப் பிரிவின் தலைமைச் செய்தியாளர் ராகேஷ் திரிபாதி ஆகியோர் அடிக்கடி பேசி ஆறுதல் அளித்தனர்.

ஈடிவி பாரத் தமிழின் செய்திப் பிரிவு பொறுப்பாளர் பிரின்ஸ் ஜெபக்குமார் மற்றும் செய்தியாளர்கள் தினசரி என்னிடமும், அரசு அலுவலர்களிடமும் என்னை பற்றி அக்கறையுடன் விசாரித்து வந்தனர். தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர்கள் பலர் தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தனர். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் இணை செயலாளர் பாரதி தமிழன், நாள் ஒன்றுக்கு மூன்று முறை போன் செய்து அன்பை பொழிந்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோரும் நம்பிக்கை வார்த்தைகளில் பேசினர். ஒரு பக்கம் ஊரில் அறிவிக்கப்படாத ஒதுக்கிவைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இன்னொரு புறம் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் என்று போனில் அழைத்து நம்பிக்கையொளியைப் பாய்ச்சினார்கள்.

இந்தச் சூழலில் 21 நாள்களைக் கடந்து நான்கு பரிசோதனை முடிவுகளில் தொற்று ஏதும் இல்லை என்று முடிவுகள் வரவே ஏப்ரல் 23ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தேன். நான் நலம் பெற்றதற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையும் அதனோடு சேர்ந்து நண்பர்களும், தலைவர்களும், ஊடகவியலாளர்களும் அளித்த நம்பிக்கையுமே என்னை இந்தப் பெருந்தொற்றிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.

எனவே பயம், அறியாமை, சுயநலத்தை ஒதுக்கிவைத்து தனித்திருந்தால் கரோனாவை எளிதில் வெல்லலாம் என்பதற்கு நானே சாட்சி... வாருங்கள் இந்நோயை விரட்டி அடிப்போம்...

Last Updated : Apr 25, 2020, 12:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details