தமிழகத்தில் வழிபாடு நடத்திய எஸ்டோனியா நாட்டினர் தஞ்சாவூர்: எஸ்டோனியா என்ற ஐரோப்பிய நாடு ரஷ்யாவில் இருந்த பிரிந்த நாடாகும். சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டின் மொழி எஸ்டோனியா. அங்கு பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவது யூரோ கரன்சி. 46 சதுர கி.மீ கொண்ட இந்த தேசத்தில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களது எஸ்டோனியா மொழியுடன் கூடுதலாக ஆங்கில புலமையும் பெற்றவர்களாக திகழ்கின்றனர்.
இவர்களது முதன்மையான தொழில் வேளாண்மையும், தொழிற்சாலைகளும் தான். வடக்கு ஐரோப்பில் அமைந்த இந்த தேசம் ஐரோப்பிய தேசங்களில் செலவீனம் குறைந்த நாடாகவும், எண்ணெய் வளம், தொலைத்தொடர்பு, மீன்பிடி, கப்பல் கட்டுமானம், வங்கியியல், உணவு, கட்டுமானம், மின்னனு சாதனங்கள், போக்குவரத்து என பல துறைகளில் சிறந்து விளங்கும் நாடாக திகழ்கிறது. வடக்கு ஐரோப்பிய தேசமான எஸ்டோனியா ரஷ்யா நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
இந்நாட்டை சேர்ந்த இன்வர் ஈஸ்வர் நந்தா (வயது 65) என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக இந்து மதம், இந்து கடவுள்கள் மீது குறிப்பாக சிவபெருமான் மீது அதீத நம்பிக்கை கொண்டு, அதன் சக்திகளையும், பெருமைகளையும் மனதால் உணர்ந்தும், அறிவியல் பூர்வமாக உண்மை என அறிந்துள்ளார். அதன் பிறகு, 18 சித்தர்களில் முதன்மையானவராக போற்றப்படும் அகஸ்தியரை குருவாக ஏற்று, அவரை பின்பற்றி அவரது வழிகாட்டுதலின்படி, எஸ்டோனியா நாட்டில், அங்கே ஆஸ்ரமம் அமைத்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆஸ்ரமத்தில் அங்குள்ளவர்களுக்கு தியானங்கள், யோகப் பயிற்சிகள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், ஈஸ்வர் நந்தா, தன்னுடன் 9 பேர் கொண்ட குழுவினருடன் சுவிட்சர்லாந்து நாட்டில் சித்தா மருத்துவராகவுள்ள கீதாஞ்சலி வழிகாட்டுதலின் படி, 48 நாட்கள் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, தரையில் துணி விரித்து அதில் உறங்கியும் மாலை அணிந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்வதை போல, கையில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு இந்த 15 நாள் புனித பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
வட இந்தியாவில் கேதார்நாத் தொடங்கி, தென் இந்தியாவில் கன்னியாகுமரி வரையிலான முக்கிய ஸ்தலங்களில் யாகங்கள் செய்தும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை சென்னை பொழிச்சலூர் கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, கஞ்சனூர், சூரியனார் கோயில், சுவாமி மலை, குத்தாலம் அருகேயுள்ள சேஷத், திரபாலபுரம் பைரவர் கோயில், தேப்பெருமாநல்லூர் சிவன் கோயில் ஆகியவற்றையும் வழிப்பட்டனர். நேற்று காலை கும்பகோணம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சரபேஸ்வர ஸ்தலமாக போற்றப்படும் திருபுவனம் கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர்.
அதன் பின் இக்குழுவினர் நேற்று மாலை மகாமக பெருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வர சுவாமியையும், இக்கோயில் பிரதான பிரகாரத்தில் அமைந்துள்ள அகஸ்திய மாமுனிவர் தவம் செய்த இடத்தில் உள்ள அமைந்துள்ள விநாயகப்பெருமானை வழிபட்டும் அங்கு அமர்ந்து தியானம் செய்தும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் இன்று கதிராமங்கலம் வனதுர்க்கையம்மன் கோயிலுக்கு சென்று யாகம் வளர்த்து வழிபாடும் செய்கின்றனர்.
இதையும் படிங்க:தஞ்சை ரயில் நிலையம் மறு சீரமைப்பு அடிக்கல் நாட்டு விழா-பாஜக தொண்டர்கள் கோஷமிட்டு வெளிநடப்பு!