தமிழ்நாடு அரசு, சமூக நலம் சத்துணவு திட்டத் துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதனை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசியப் பெண் குழந்தைகள் தினத்தில் பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், வருகிற ஜனவரி 2021இல் தேசியப் பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.