கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து, பா.ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். அதனால், முன்ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரஞ்சித் மனுதாக்கல் செய்தார். அதில், வரலாற்று தகவலின் அடிப்படையில் நான் பேசினேன். எந்த சமூகத்தினருக்கும் எதிராக பேசவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மக்கள் கொண்டாடும் மன்னர் ஒருவரை இவ்வாறு பேசுவது ஏன்? இதுபோன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் எனக்கூறி, மூன்று நாட்கள் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ராஜராஜ சோழன் குறித்து பேசிய வழக்கு தொடர்பாக நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் பா.ரஞ்சித் ஆஜரானார். பின்னர், திருப்பனந்தாள் காவல் நிலையித்தில் கையெழுத்திட்டு சென்றார். இரண்டாம் நாளான இன்றும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தார்.
அப்போது அவரிடம், செய்தியாளர்களை சந்திக்கும்படி கேட்டதற்கு, 'அதற்கு விருப்பமில்லை' என்று கூறி மறுத்துவிட்டார். தொடர்ந்து கையெழுத்திடுவது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதா என்று கேட்டதற்கு 'ஏற்படுத்தவில்லை' என்று சொல்லிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.