தஞ்சாவூர்: கும்பகோணத்தில் முன்னாள் திமுக துணை தலைவர் பக்கீர் மைதீன் என்பவர், தனக்கு சேரவேண்டிய பணத்தை கேட்டதற்காக தன்னை 11வது வட்ட திமுக உறுப்பினர் சோடா கிருஷ்ணமூர்த்தி என்பவர் பயங்கர ஆயுதங்களால் தாக்க வந்ததாகவும்; எனவே, அவர்மீது போலீசார் நடவடிக்கை எடுக்குமாறும் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சியின் 11வது வட்ட திமுக உறுப்பினர் சோடா கிருஷ்ணமூர்த்தி. இவருக்குச் சொந்தமான கடையை, அய்யம்பேட்டை பேரூராட்சியின் முன்னாள் திமுக துணைத் தலைவர் பக்கீர் மைதீன் என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, சோடா கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கடையை லீஸுக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். பின், சரிவர வியாபாரம் இல்லாததால் தான் கடையை ஒப்படைத்து விடுவதாக அதன் உரிமையாளரான சோடா கிருஷ்ணமூர்த்தியிடம் பக்கீர் மைதீன் கூறியுள்ளார். ஆனால், கடையை ஒப்படைக்கவேண்டாம் என்றும்; தன்னால் பணத்தை தற்போதைக்கு திருப்பி தர இயலாது எனவும்; வேண்டுமெனில், கூடுதலாக ஓராண்டுக்கு வாடகைக்கு கடையை எடுத்துக்கொள்ளும்படியும் கூறியுள்ளார், சோடா கிருஷ்ணமூர்த்தி.
இதனால், மேலும் ஓராண்டுக்கு கடையை எடுத்து நடத்தியுள்ளார், பக்கீர் மைதீன். பின், ஒரு வருடம் கழித்து கரோனா தொற்றினால் வியாபாரம் இல்லாமல் தவித்த நிலையில் இறுதியாக அவர் கடையை காலி செய்துள்ளார். எனவே, தனக்கு சேரவேண்டிய தனது பணத்தை திரும்ப தரக்கோரி, சோடா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, அவர் பயங்கர ஆயுதங்களால் தாக்க வந்ததாகக் கூறி, சோடா கிருஷ்ணமூர்த்தி மீது கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால், காவல்துறையினர் அந்தப் புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் முறையிட்டதால் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும்; அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் மீண்டும் இன்று (ஜன.17) புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு திமுக நிர்வாகியிடம் மற்றொரு திமுக நிர்வாகியே மோசடி செய்துள்ள சம்பவம் கும்பகோணம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் திமுக என்பதால், காவல் துறையினர் என்ன நடவடிக்கை எடுப்பது? என்ன பதில் சொல்வது? எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இதையும் படிங்க: பொய்யான வாக்குறுதியளித்து மக்களுக்கு பட்டை, நாமம் போட்டுவிட்டது திமுக: ஜெயக்குமார்