தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கடைமடை பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் காவிரி நீர் தாமதமாக வருவதால் சம்பா சாகுபடி தாமதமாகதான் தொடங்கப்படும். அதே போல், இந்த வருடம் காவிரி நீர் தாமதமாக வந்தாலும் நீர்நிலைகள் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால், கடந்த ஒரு மாத காலமாக சம்பா சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு தற்போது கதிர் வரும் தருவாயில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் ,பேராவூரணி ஆகிய பகுதிகள், இதைச் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், தற்போது இந்த நெற்பயிர்களை ஆனை கொம்பன் நோய் தாக்கியுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகள் இம்முறை காவிரி நீர் வருகை, பருவமழை பெய்ததால் கடன் வாங்கி ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 வரை செலவு செய்து விவசாயிகள் சம்பா சாகுபடி செய்தனர். சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்களில்தற்போது கதிர் வரும் தருவாயில் ஆனை கொம்பன் நோய் தாக்கியிருப்பது சிறு-குறு விவசாயிகளை மட்டுமல்லாமல் பெரிய விவசாயிகளையும் பாதிப்பை ஏற்பத்தியுள்ளது.