தென்காசி: பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் தின்பண்டங்கள் வாங்க கடைக்குச் சென்றபோது, “ஊர்க்கட்டுப்பாடு காரணமாக திண்பண்டம் வாங்க வரக் கூடாது. வீட்டில் போய் சொல்லுங்கள்” என கூறி கடைக்காரர் சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்தார்.
இந்த நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர், கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் மற்றும் சுதா ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து மூவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கடை உரிமையாளரான மகேஸ்வரன், மறு உத்தரவு வரும் வரை திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
ராமச்சந்திரன் மற்றும் சுதா ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் இருப்பதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்படுகிறது. மேலும் ராமச்சந்திரன் மற்றும் சுதா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தென்காசி தீண்டாமை விவகாரம்... பாஞ்சாகுளம் விஏஓ பணியில் இருந்து விடுவிப்பு...