தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கடந்த 22ஆம் தேதி வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்ம முறையில் உயிரிழந்தார் .
வனத்துறையினர் தாக்கியதால் தான் அணைக்கரைமுத்து இறந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து கடந்த 8 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அணைக்கரைமுத்துவின் மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கில், உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்படி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மறு பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் செல்வமுருகன், தடயவியல்துறை இணைப் பேராசிரியர் பிரசன்னா தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் சுடலைமுத்து ஆகியோர் வீடியோ பதிவுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர்.