தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சமீரண் இன்று (நவ. 16) வெளியிட்டார்.
அதன்படி மாவட்டத்தில் ஆறு லட்சத்து 34 ஆயிரத்து 450 ஆண் வாக்காளர்களும்,
ஆறு லட்சத்த 57 ஆயிரத்து 191 பெண் வாக்காளர்களும்,
40 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதம் 12,13 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர் நீக்கம், திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"தென்காசி மாவட்டம் வளர்ந்து வரக்கூடிய மாவட்டமாகும். எனவே தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகமான நலத்திட்ட பணிகள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், மக்களுக்கான சேவைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு 10க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தொற்று எண்ணிக்கை நிலையானதைத் தொடர்ந்து குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதுவரை சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும்"
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:சேலம் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது!