புரெவி புயல் காரணமாக, தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவரிசையில், தென்காசி மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
புரெவி புயல்: தென்காசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
தென்காசி: மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
குற்றால அருவிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தபின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " தென்காசி மாவட்டத்தில் முந்தைய காலகட்டத்தில் வெள்ளம் வந்த பகுதிகளை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்டத்தில் 34 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் கனமழையை கண்காணிக்க அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய 364 முதல் நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்திலுள்ள 446 குளங்கள் மற்றும் 5 நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கரைகளின் உறுதித்தன்மையை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.