தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் தெற்கு பகுதியில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இன்று அக்கடையில் அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி, சின்னத்தம்பி, கடல்மணி, பார்த்திபன், செல்வகுமார், ரஞ்சித்குமார், வேலு ஆகிய ஏழு பேரும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து மது வாங்கியுள்ளனர்.
டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது!
தென்காசி: கீழப்பாவூர் தமிழ்நாடு அரசு மதுபான கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து மது வாங்கிய ஏழு பேரை பாவூர்சத்திரம் காவல்துறையினர் கைது செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மதுபான கடையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவதாக செய்திகள் வந்த நிலையில், அக்கடையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் துரைராஜ் காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் 7 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த நூறு ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுவரை அவர்கள் 10 லட்சத்திற்கும் மேல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்பட்ட நிலையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.