கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை, மத்திய அரசு அறிவித்தது. இதனால், அனைத்து தொழில்களும் முடங்கின. ஊரடங்கு காரணமாக பல்வேறு சிறு, குறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். அதில் பிரம்புத் தொழிலும் ஒன்று.
பிரம்பு தொழிலுக்கு ஏன் இந்த நிலைமை? தென்காசி மாவட்டத்தில் பிரம்பைப் பிரதானமாக் கொண்டுள்ள தொழிலில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் இத்தொழிலை நம்பிய பிழைப்பு நடத்திவருகின்றனர். இங்கு பிரம்பால் விதம் விதமாக சோபாக்கள், ஊஞ்சல் நாற்காலிகள், டீபாக்கள், கூடைகள், கட்டில் உள்ளிட்ட பல வகையான பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த கைவினை பொருள்களை ஏராளமானோர் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்தத் தொழிலுக்கு தேவையான பிரம்புகள் அஸ்ஸாம், இந்தோனேசியா பகுதிகளிலிருந்து வாங்கப்படுகிறது. தற்போது கரோனா பரவுதல் அச்சம் காரணமாக வெளிமாநில, வெளிநாட்டு வாகன சேவைகள் தடைபட்டுள்ளதால் மூலப் பொருள்கள் வரத்து குறைந்துள்ளது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கையால் மூலப்பொருள்களின் விலை உயர்ந்து பிரம்பு தொழில் நலிவடைந்தது. தற்போது ஊரடங்கால் எவ்விதவருமானமுமின்றி தவித்துவருகின்றனர்.
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் இன்னும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் விற்பனையும் சரிவர நடைபெறுவதில்லை. தற்போதுவரை எந்த நிவாரணமும் பிரம்புத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல பிரம்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு வழங்கவேண்டும் எனக் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வீட்டில் இருந்தே வேலை' - குடும்பத்தைத் தாங்கும் மதுரை பெண்கள்!