நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை அறிவித்துவருகின்றன.
இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தேர்போகி பாண்டியும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மாரியப்பன் கென்னடியும் களமிறங்கியுள்ளனர்.
இதனிடையே, இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சியின் தொண்டர்கள் சார்பில் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக காரில் வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் திருப்புவனம் கிராம நிர்வாக அலுவலர் பீமன், மானாமதுரை பறக்கும்படை அலுவலர் வட்டாட்சியர் செந்தில்வேல், சிவகங்கை கிராம நிர்வாக அலுவலர் கெளரி சங்கர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தேர்போகி பாண்டி, மாரியப்பன் கென்னடி, அமமுக மாவட்டச் செயலாளர் உமாதேவன், கட்சி நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக வேட்பாளர்கள் மீது அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறை வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.