சிவகங்கை:தொல்நடைக் குழுவைச் சேர்ந்த க.சரவணன் என்பவர் வித்தியாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசாவிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறுகையில், " சிவகங்கையை அடுத்த அரசனேரி கீழமேடு பேச்சிக்குளம் முனிக்கோயிலில் மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக என்னிடம் சரவணன் ஒப்படைத்தார். இது செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தது. இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தைக் கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்தது. இக்காசுகள் குறித்த முழுமையான தகவலை தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் உதவியோடு ஆய்வு செய்ததில் இவை பீஜப்பூர் சுல்தான்கள் வெளியிட்ட காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
பீஜப்பூர் சுல்தான்கள்:கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராஷ்டிரப் பகுதியையும் 1490 முதல் 1686 ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள் பீஜப்பூர் சுல்தான்கள். கிபி 1490 இல் பாமினி சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியரசாக இது செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.
செம்புக்காசுகள்: சங்க காலம் தொட்டே காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் தங்கம் வெள்ளியை அடுத்து பிற்காலத்தில் செம்பால் ஆன காசுகள் ஆட்சியாளர்களால் பெருவாரியாக வெளியிடப் பெற்றன. நமக்கு கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆனதோடு அதிக எடை உள்ளதாக உள்ளன. மூன்று காசுகளில் 2 காசுகள் 8 கிராம் எடையும் ஒரு காசு 7 கிராம் எடையுமாக உள்ளன. ஒரு காசில் தேவநாகரி எழுத்தில் 'ராஜா' என்று எழுதப் பெற்றுள்ளது மற்ற எழுத்துக்கள் பாரசீக எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.