மகரிஷி என்கிற பாலசுப்ரமணியம் தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாளர். மே 1, 1932ல் தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், டி.என். கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு பிறந்த இவர், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் பள்ளிப்பருவத்திலேயே எழுதத் தொடங்கி விட்டார்.
தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமை திகழ்ந்த இவர், சுமார் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் புதினம் "பனிமலை" வெளிவந்து சில வருடங்களிலே 1965ல் "என்னதான் முடிவு" என்ற திரைப்படமாக வெளிவந்தது.
இதுமட்டுமல்லாமல் இவரது மற்ற புதினங்களும் தொடர்ந்து திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றது . பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), நதியை தேடி வந்த கடல் (1980) உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வெள்ளித்திரையில் பெரிய வெற்றியை பெற்றது.
தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷியுடையது மட்டுமே. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியை தேடிவந்த கடல்’ இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.