சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் பாரதி, 'தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பாமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது.
மேலும், தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கிடு முறை பின்பற்றப்படாமல் இருப்பதை அரசு கண்டு கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கையின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, படித்த இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இளைஞர் பெருமன்றத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் தமிழ்நாட்டில் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகளில் கடை நிலை ஊழியர்களை மட்டும் தண்டிக்காமல், இதில் சம்மந்தப்பட்ட ஆளுங்கட்சியினர் மற்றும் உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைக் கண்டித்து, ஜனநாயக மேடை என்ற அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து பிப்ரவரி முதல் மார்ச் வரை மாநிலம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடத்தவுள்ளோம்.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நிலையை ஒரு போதும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க :பிப்ரவரி 4இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்