சேலம் ஶ்ரீ ராகவாச்சாரியார் மண்டபத்தில் சேலம் மாவட்ட சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பத்மஸ்ரீ சின்ன பிள்ளை, கூட்டமைப்பை தொடங்கி வைத்து பெண்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர்," கிராமப்புற பெண்கள் பொருளாதார அளவில் முன்னேற்றம் காண சுய உதவிக் குழுக்களின் அறிமுகம் கட்டாயம் தேவை.
25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வட்டாரத்தில் சுய உதவிக் குழுக்களை தொடங்கி, கடுமையாகப் போராடி இன்று பல்வேறு விருதுகள் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளேன். இதேபோல எல்லா மாவட்ட ஏழை பெண்களும் சுய உதவிக் குழுக்களை நடத்திட முன்வரவேண்டும்.
இந்தக் குழுக்கள் மூலம்தான் குடும்ப வருமானம் பிள்ளைகளின் கல்வி திருமணம் ஆகியவற்றுக்கு தேவைப்படும் பணம் கிடைக்கும். இதன்மூலம்தான் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் களஞ்சியம் சுய உதவிக்குழு மற்றும் ஆரோக்கியம் அறக்கட்டளை ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.