சேலம்: தமிழ்நாட்டில் கட்டட தொழிலில் செங்கல் பயன்பாட்டிற்குப் பதிலாக தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலர் சாம்பல் கற்கள் உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட உலர் சாம்பல் கற்கள் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட உலர் சாம்பல் கற்கள் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உலர் சாம்பல் கற்கள் உற்பத்தி தொழிலில் உள்ள சிரமங்கள் குறித்தும், அவற்றின் தேவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஒரு உலர் சாம்பல் கல்லின் குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர், உலர் சாம்பல் உற்பத்தியாளர்களின் பிரதிநிதி நடராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் மட்டும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலர் சாம்பல் உற்பத்தி செய்யும் தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன.
சிறியதும் பெரியதுமாக இயங்கி வரும் இந்த உலர் சாம்பல் கல் உற்பத்தி தொழிலில் ஏற்படும் சிரமங்கள், இந்த தொழிலின் தேவைகள் குறித்தும் நாங்கள் விரிவாக கலந்து ஆலோசித்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக, தற்போது உலர் சாம்பல் மூலம் தயாரிக்கப்படும் ஒரு கல்லின் விலை குறைந்தபட்சம் 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.