சேலம் மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சேலத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா ஆபரேஷன்
அதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டி காவல் எல்லைக்குள்பட்ட ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், மெய்யனூர் சாலை, அத்வைத் ஆசிரமம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 151 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை நேற்று (செப்.25) சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் பேசுகையில், “மூன்றாவது கண் என கூறப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பல வழக்குகளில் துப்பு கிடைத்துள்ளது.
சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து உடனே விசாரித்து கைது செய்ய முடிகிறது. சேலம் மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒரு லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் உள்ளிட்ட திரளான காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் விதிமீறல்கள் - இதுவரை 285 புகார்கள் பதிவு