தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை எடுத்து குடிநீர் தயாரித்து விற்பனை செய்வதற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனையடுத்து தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரித்து குடிநீர் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது .
மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நீர் உற்பத்தி நிலையங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் சுத்திகரிப்பு நீர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு அரசு உதவிட வேண்டும் என்றும் இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆலைகளுக்கு சீல் வைப்பதை அலுவலர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சேலத்தில் இன்று பத்திரிக்கையாளர்களிடையே பேசிய சேலம் மாவட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள், "2014ஆம் ஆண்டிற்கு முன்பு உரிமம் வாங்கி குடிநீர் ஆலைகளை நிறுவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் எங்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் .
அதே நேரத்தில் மற்ற தனியார் நிறுவனங்களைப் போல நாங்கள் நிலத்தடிநீரை சொந்த உபயோகத்துக்காக எடுத்து விற்பனை செய்யவில்லை. பொதுமக்கள் சேவைக்காக தான் குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். எனவே இது தொடர்பாக முதலமைச்சர் தலையிட்டு எங்களது பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.
மினரல் வாட்டர் வினியோகஸ்தர்கள் நடத்திய போராட்டம் சேலத்தில் மட்டும் 10ஆயிரம் வாடிக்கையாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தங்குதடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தமிழ்நாடு அரசு உதவிட முன் வர வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!