சேலம் மாவட்டம், எருமாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஒருங்கிணைந்த நூற்பாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் சேலத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் நூற்பாலையில் ஆய்வு செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
சேலம்: தனியார்(ஏஎல்சி) ஒருங்கிணைந்த நூற்பாலையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக குடியிருப்புவாசிகள் அளித்த புகாரையடுத்து, அப்பகுதியில் காற்று மாசு அளவீட்டுப் பணிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு உடன்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் ஆர்பாட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உறுதியளித்தனர். அதன்படி சர்ச்சைக்குரிய நூற்பாலையை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அளவீட்டுமானி பொருத்தும் பணிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மேற்கொள்ளும் சோதனை குறித்து தகவலறிந்த ஆலை நிர்வாகம், தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் அவல நிலைக்கு உரிய தீர்வுகாணும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.