சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பியூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம் தொடங்கி, சான்றிதழ் படிப்புகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைவராக பல்கலைக்கழக பதிவாளர் கே.தங்கவேல், இயக்குனர்களாக துணைவேந்தர் இரா.ஜெகநாதன், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் செ.சதீஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் முறைகேடுகள் செய்வதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் உயர் கல்வித்துறைக்கும், கருப்பூர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, துணைவேந்தர் இரா.ஜெகநாதன் உள்பட 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் துணைவேந்தர் இரா.ஜெகநாதனை கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் மற்ற மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் இரா.ஜெகநாதனின் வீடு, அலுவலகம், பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில், சுமார் 21 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, துணைவேந்தருடய நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இந்த நிலையில், பியூட்டர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பாக பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் கே.ஜெயராமன், மேலாண்மை கல்வித்துறைப் பேராசிரியர் ஆர்.சுப்பிரமணிய பாரதி, தொகுப்பூதியப் பணியாளர் தந்தீஸ்வரன், உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் நரேஷ்குமார் ஆகிய 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி 5 பேரும் கருப்பூர் காவல் நிலையத்தில் இன்று (ஜன.04) ஆஜாராகினர். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகள் குறித்து தனித்தனியாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும், தனி அமைப்பு தொடங்கியது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி; ஜன 8-இல் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!