சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 117 மாணவர்கள் ஆங்கில வழி கல்வி வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக, புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழாவை அப்பள்ளி மாணவர்கள் நடத்தினர். டேனிஷ்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் ஒன்றாம் வகுப்பு வரை 264 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
புதிய மாணவர்களுக்கு மலர்த்தூவி வரவேற்பு!
சேலம்: அரசு பள்ளியில் சேர்ந்துள்ள புதிய மாணவ மாணவிகளுக்கு, அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் மலர்த்தூவி வரவேற்பு அளித்தது சேலம் மாவட்ட பொதுமக்கள், கல்வியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக படிப்பு, பொது அறிவு, விளையாட்டு உள்ளிட்டவையில் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அந்த திறமைகளை ஊக்குவித்து, சிறந்த மாணவர்களை உருவாக்கியும் வருகின்றனர். இதை அறிந்த பக்கத்து ஊரில் வசிக்கும் பெற்றோர்கள், அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், தினமும் மாணவர்கள் சென்று வர ஆட்டோ ஏற்பாடு செய்து இந்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இதனால் அப்பள்ளியில் இவ்வருடம் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து அப்பள்ளி தலைமையாசிரியர் புவனா தலைமையில் புதிய மாணர்வர்களை மலர்கள் தூவி அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வரவேற்றனர். மேலும் அவர்களை கௌரவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காகித கிரீடம் தலையில் அணிவித்து அழைத்து வந்தனர். இதனை கண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் நெகிழ்ச்சயடைந்தனர்.