சேலம்:சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று (செப்.6) மாலை அரசுப் பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், "அரசு பொருட்காட்சியில் தமிழக அரசின் அறியாத திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பொருட்காட்சி 45 நாள்களுக்கு நடைபெற உள்ளது. கடந்த 2022ல் நடைபெற்ற அரசு பொருட்காட்சியை 1.58 லட்சம் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதன் மூலம் அரசுக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்தது. அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
விழாவில் உரையாற்றிய, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. மாவட்டம் தோறும் மகளிர் உரிமைத் திட்டம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு துறையிலும், அந்த துறை செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது" என்று கூறினார்.
ஆட்சியர் செ.கார்மேகம் பேசுகையில், "சேலம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 15,958 மாணவிகளும், இலவச பேருந்து திட்டத்தில் நாளொன்றுக்கு 2.5 லட்சம் மகளிரும், தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் 1,01,318 மாணவ, மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத் திட்டத்தில் சுமார் 7.60 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
33 அரங்குகள்: இந்த அரசு பொருட்காட்சியில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி உள்ளிட்ட 6 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.