சேலம்: திருச்சி மாவட்டம் லால்குடி விராகலூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக போராளி ஸ்டேன் சுவாமி. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாழும் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டார்.
அம்மாநில மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தனது இறுதிக்காலம்வரை குரல் கொடுத்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகானில் நடந்த கலவரத்தில் இவருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நலக்குறைவால் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் காலமானார்.
நாடு முழுவதும் ஸ்டேன் சுவாமியின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள், அரசியல் இயக்கத்தினர் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.