சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்திற்கு வாரநாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெற்றுவருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனங்கள், ஊன்று கோல்கள், செயற்கை கால்கள், பேட்டரி வாகனங்கள் என்று பல்வேறு வகையிலான உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கடந்த பல மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதி, இருசக்கர வாகனங்கள் ஆக்ரமிக்கப்பட்டு நிறுத்துமிடமாக மாறி மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதில் கடும் அவதிப்பட்டுவந்தனர். கண் பார்வைத் திறன் குறைந்தவர்கள், நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் எனப் பலவகை மாற்றுத்திறனாளிகள் அலுவலக நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்ல இயலாமல் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இடித்துக்கொள்வதால் காயமேற்பட்டு அவதிப்பட்டுவந்தனர்.