தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2019, 7:23 AM IST

ETV Bharat / state

டெங்கு நோய்த்தடுப்பு பணியில் நூறுநாள் திட்ட பணியாளர்கள் - மாவட்ட ஆட்சியர்

சேலம்: டெங்கு நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சேலம் மாவட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சிங்கிபுரம், குமாரபாளையம் மற்றும் துக்கியம்பாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர காய்ச்சல் தடுப்பு, டெங்கு நோய்த்தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தற்போது வட கிழக்கு பருவழை தொடங்கி உள்ளதால் மழை தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தீவிர காய்ச்சல் தடுப்பு, டெங்கு நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேபோல் அனைத்து ஊரக, நகர்புற, உள்ளாட்சி பகுதிகளிலும், மாநகர பகுதிகளிலும், டெங்கு நோய்த்தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பணிகளையும் முழுமையாக மேற்கொள்வதற்கு ஏற்கனவே, சேலம் மாவட்டத்தில் 2,467 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, கூடுதலாக கிராம ஊராட்சி பகுதிகளில் 400 கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு மொத்தம் 2,867 டெங்கு நோய்த்தடுப்பு, கொசுப் புழு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை செய்யும் மருத்துவர்கள்

கொசு ஒழிப்புப் பணியாளர்களுடன் பள்ளிகளில் 8,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள், செவிலியர் கல்லூரி, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும் தூய்மை தூதுவர்களாக நியமிக்கப்பட்டு “வீடுதோறும் சென்று விழிப்புணர்வு” என்ற மாபெரும் இயக்கத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும், தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 ஊராட்சிகளிலும் தீவிர டெங்கு நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தூய்மை பணிகளையும் மேற்கொள்ள இன்றுமுதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் சுமார் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே உற்பத்தி ஆகின்றது. குறிப்பாக வீடுகளில் உள்ள பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படும் நீர், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தப்படாமல் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுத்தமான நீர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பொருட்கள் போன்றவற்றில் மழை நீர் தேங்குவதாலும், வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பிரிட்ஜ் போன்ற வற்றில் தேங்கும் நீரிலும் டெங்கு கொசு உற்பத்தி ஆகின்றது.

எனவே கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தூய்மை தூதுவர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுடன் இணைந்து நாள்தோறும் அவர்களுக்கென்று ஒதுக்கப்படுகின்ற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தி ஆகக் கூடிய வகையில் ஏதேனும் நீர் சேமிக்கும் பாத்திரங்களோ, தண்ணீர் தொட்டிகளோ இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து அவற்றை சுத்தமாகவும், மூடியும் வைத்துள்ளார்களா என்பதையும் கண்காணித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நூறுநாள் திட்ட பணியாளர்களுடன் ஆலோசனை செய்யும் மாவட்ட ஆட்சியர்

டெங்கு நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை ஆய்வு செய்வதற்கு மாவட்ட நிலையிலான மற்றும் ஒன்றிய அளவிலான 80-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நாள்தோறும் இப்பணிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருவதோடு, டெங்கு நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தாமாக முன்வந்து சுத்தம் செய்திட வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details