சேலம் மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் "உகந்த உணவுத்திருவிழா" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் சிங்கர் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த உணவுத்திருவிழாவில், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள் மற்றும் சேலம் மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள் மற்றும் அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து உகந்த உணவுத் திருவிழாவில், 3 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் முதலாவதாக அடுப்பில்லா ‘அதிவேக ஆரோக்கிய சமையல்’ என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 250 பெண்கள் எவ்விதமான அடுப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் 3 நிமிடங்களில் 500 வகையான உணவுகளைத் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினர்.