தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓமலூர் அருகே போலி மருத்துவர் கைது: கிளினிக்கிற்கு சீல்!

சேலம்: ஓமலூர் அருகே காலாவதியான மருந்து மாத்திரைகளை கொண்டு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவர் நடத்திவந்த கிளினிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

By

Published : Jul 23, 2019, 1:28 PM IST

fake doctor

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள சந்தைப்பேட்டையில் முருகேசன் என்பவர் பல வருடங்களாக அருண் கிளினிக் ஒன்றை நடத்திவந்தார். இங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இது குறித்து ஓமலுார் எம்எல்ஏவிடம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று மாநில மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் மாநில ஆய்வு கண்காணிப்புக் குழு ஒன்று சேலம் வந்தது. அங்கு முருகேசனிடம் உடல்நிலை சரியில்லை என்று நோயாளிபோல் ஒருவர் சென்று கூறியபோது, அவருக்கு முருகேசன் ஊசி போட முயன்றார்.

அப்போது அங்கு மறைந்திருந்த குழுவினரும், காவல் துணை கண்காணிப்பாளர் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து குடும்ப நலம், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் சத்தியா, ஓமலூர் மருத்துவ அலுவலர் ஜெயேந்திரன் ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்களும் சேர்ந்து முருகேசனின் கிளினிக்கை ஆய்வு செய்தனர்.

போலி மருத்துவர் கைது

இதில் போலி மருத்துவ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்த்து வந்ததும், உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கக் கூடிய காலாவதியான மாத்திரைகள் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

இது குறித்து இணை இயக்குநர் சத்தியா கூறுகையில், இவர் நான்குமுறை கைதாகி, ஒருமுறை தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும், தனியாருக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுவதால், அங்கு சென்று பொதுமக்கள் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details