சேலம்:எருமாபாளையம் பகுதியில் மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ இன்று (மார்ச் 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய துரை வைகோ, “தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசிய காரணத்திற்காக பீகாரைச் சேர்ந்த 15 இளைஞர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் பொய்யான வதந்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை குறிப்பிடுகிறேன்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா காலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மீண்டும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் பல லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 50 முதல் 75 சதவீதம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த தொழிற்சாலைகளும் முடங்குவதற்கு காரணமாக இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் என்று தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். உடல் உழைப்பு தருகின்ற தொழில்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாரும் ஈடுபட விரும்புவதில்லை. இதை விட்டு உயர்தர வேலைகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் சென்று விட்டனர். எனவே, தமிழ்நாட்டில் உண்டான ஆட்கள் பற்றாக்குறையால், தமிழ்நாட்டு தொழிற்சாலை முதலாளிகள் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் நிறைய இடங்களில் ஆட்கள் தேவை என்று போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வடமாநில இளைஞர்களால்தான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற தவறான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாத் உமரோ, பாஸ்கர் மற்றும் வாட்டர்போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகை தவறான வதந்திகளைப் பரப்பி வருகிறது.
பிரசாத் உமரோவிற்கு இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பலமுறை தவறான வதந்திகளைத் தொடர்ந்து பரப்பியுள்ளார். இவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கூறும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் மீது வன்முறையும், தாக்குதலும் நடக்க பல வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறார்கள்.