தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு வழக்கு விவகாரத்தில் அதிமுக நிர்வாகி பேரம் பேசினார்" - தனபால் பரபரப்பு பேட்டி!

kodanad case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து பேட்டி அளித்து வரும் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், "கோடநாடு விவகாரத்தை மூடி மறைக்க என்னிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டு பேரம் பேசினார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 7:15 PM IST

Updated : Sep 7, 2023, 9:40 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த தனபால்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த தனபால்

செய்தியாளர்களைச் சந்தித்த தனபால்

சேலம்: கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோடநாடு கொலை வழக்கு பற்றி கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி, கொங்கணாபுரம் அதிமுக பிரமுகர் ஒருத்தரை வைத்து பேரம் பேசினார்.

கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டும் என்று அந்த நபர் கேட்டார். பணத்திற்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. கோடநாடு பங்களாவில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்க கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கியப்புள்ளி மூலம் பேரம் பேச வந்தார். பேரம் பேசவேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டேன்.

எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும் என் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்னையும், கருத்து வேறுபாடும் கிடையாது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு எனது மனைவி குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

அதற்கு காரணம் குழந்தைகளுக்கு பள்ளி தேர்வு நடந்து வருகிறது, ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, அவரது தாய் வீட்டிற்கும் பள்ளிக்கும் தூரம் மிகவும் குறைவு. இதனால் தான் அவர் அங்கு சென்று இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றிய கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணையில் நான் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வரும் 14ஆம் தேதி சம்மன் வந்துள்ளது. ஆனால் நாளையே என்னை விசாரிக்க சம்மன் அனுப்பவேண்டும் என்று சிபிசிஐடி காவல் துறையினரிடம் கேட்டுக் கொள்கிறேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது, நாள்கள் கடந்து போகபோக, வழக்கு நீர்த்து போய் வருகிறது.

கோடநாடு வழக்கு தொடர்பாக அப்போதைய விசாரணை அதிகாரி, ஐ.ஜி. சுதாகர் மற்றும் சேலம் எஸ்பி-யாக இருந்த இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான், என்னை கடுமையாக தாக்கினர். கோடநாடு வழக்கில் எவ்வளவு பணம் வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னதாக கூறி அதிமுக பிரமுகர் பேரம் பேசினார். எடப்பாடி பழனிசாமி பற்றி என்னிடம் பேசவேண்டாம் என்று கூறி அனுப்பி விட்டேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் தான் எனக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக எனது மனைவி பயத்திற்கு காரணம், எங்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர்; தந்தை இல்லாமல் போனால் அவர்கள் நிலை என்னவாகும் என்று தான் எனது மனைவி பயப்படுகிறார். கோவையில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் விசாரணையின்போது ஆஜராகி அனைத்து உண்மைகளையும் சொல்கிறேன்.

மேலும் புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன். எனது மனைவியைத் தூண்டிவிட்டு, என் மீது புகார் கொடுப்பதால் என்னை காவல் துறை கைது செய்துவிடும் சூழல் உள்ளது. இதனால் கோடநாடு வழக்கில் விசாரணையில் நான் ஆஜராகாமல் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்படும்” என தெரிவித்தார்.

முன்னதாக இன்று (செப்.07) சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனபாலின் மனைவி, தனபால் மீது புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் தன்னை தாக்குவதாக கூறியிருக்கிறார். மேலும், அவரது தாக்குதலின் பேரில் தான் தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றதாக தனபாலின் மனைவி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. விரட்டிச் சென்று தாக்கிய கொடூரம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Last Updated : Sep 7, 2023, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details