சேலம் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை முதல் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே ஏற்றப்பட வேண்டும் என்ற கரோனா வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு சில பேருந்துகள் உத்தரவை மீறி கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், பயணிகள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் பேருந்துகளில் பயணிப்பதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்தன.
இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று (ஜூலை.11) சேலம் புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பயணிகளை ஏற்றிச் சென்ற மாநகரப் பேருந்துகளை நிறுத்தி, முகக் கவசம் அணியாதவர்கள், முகக்கவசத்தை முறையாக அணியாதவர்கள், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்காத பயணிகள் ஆகியோருக்கு மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் கட்டாய கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கூடுதல் பயணிகளை ஏற்றிவந்த ஓட்டுனர்கள், நடத்துனர்களையும் காவல் துறையினர் எச்சரித்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இரண்டாம் அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 90 ஆயிரம் பேர் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை, காய்ச்சல் முகாம்கள் அமைத்து நாள்தோறும் சுமார் ஏழாயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 60 பிரிவுகளில் 80க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக சேலம் மாவட்ட அளவில் தினசரி ஆயிரத்து 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலை மாறி தற்போது இருநூறுக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஓடும் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ”சாலைகளில் தேவையில்லாமல் இரண்டு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிபவர்களையும், பேருந்துகளில் விதிமுறைகளை மீறி பயணிக்கும் பயணிகளையும் வழியில் தடுத்து நிறுத்தி கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை நோய்த் தொற்று குறையும் வரை தொடரும்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கொங்குவை குறி வைக்கும் திமுக