சேலம் மாவட்டம் சித்தனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வழித்தட தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். அதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் விஜயராஜா, ராம்குமார் ஏழுமலை ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ததாக கிராம நிர்வாக அலுவரிடம் சரணடந்தார்.
அதனால் காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த வழக்கு சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அப்போதைய இரும்பாலை காவல் ஆய்வாளர் சண்முகம் தரப்பில் மணிகண்டன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டனின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு உடற்கூறாய்வு செய்து, சிபிசிஐடி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.