சேலம்:சேலத்தில் தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு நிலத்தை கையகப்படுத்த வந்த வங்கி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் மோகன் என்பவரின் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதனிடைய மோகன் என்பவர் வங்கியில் விவசாய நிலத்தின் மீது தொழில் கடன் பெற்றுள்ளார்.
கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வரும் நிலையில், திடீரென இந்த இடத்தை மாற்று நபருக்கு, வங்கி மூலம் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும்; நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த இரண்டு மாதங்களாக வங்கி நிர்வாகம் ஜெயராம் என்பவரை அடி ஆட்களை கொண்டுவந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக, ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் நிலத்தை அபகரிக்க, வங்கி நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று (பிப்.3) விவசாய நிலத்தில் அனைவரும் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, காவல் துறையுடன் வங்கி நிர்வாகத்தினர் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். மேலும், வங்கிகளுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் விவசாய நிலத்தை ஜப்தி செய்வதற்காக வந்தனர்.