சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக அவ்வப்போது பெய்த மழையால் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாழப்பாடி, ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.
இதனால், சேலம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கென தனித்துவமான வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு காய்ச்சல் தாக்கம் அவர்களுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக டெங்கு வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சலின் வீரியம் குறையவில்லை என்றால் மக்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி சேலம் மாவட்ட அரசு பொது மருத்துவமனை முதல்வர் திருமால் பாபு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:சாலையில் கிடந்த பூசணிக்காய்களை அகற்றிய இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு