ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலூர் மாவட்டத்திலிருந்து சிலர் சட்ட விரோதமாக கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU) காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான காவல் துறையினர் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையின் ஓரமாக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அந்த காரில் உள்ள நபர்களின் நடவடிக்கைகளை காவல் துறையினர் கண்காணித்துக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காரில் இருந்தவர்களிடம் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அதிர்ந்துபோன காவல் துறையினர் அங்கிருந்து சென்ற காரை துரத்திச் சென்றனர். அதிவேகமாக சென்ற அந்த காரை வி.சி.மோட்டூர் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர், காரில் இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.