ராமநாதபுரம்:கடந்த சில நாள்களாக மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள், புகையிலை, கஞ்சா உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தடுப்பதற்காக கடலோரக் காவல் படை, காவல் துறையினர், கடற்படை உள்ளிட்டப் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மஞ்சள் பறிமுதல்
இந்நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளைப் பகுதியில், சமையல் மஞ்சளை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று (செப்.25) மண்டபம் சார்பு ஆய்வாளர் கோட்டைசாமிக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் கோட்டைசாமி தலைமையில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் வேதாளை ஊராட்சி தெற்கு தெரு பள்ளிவாசல் அருகே மூமினாம்மாள் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், சுமார் 3,010 கிலோ சமையல் மஞ்சள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
இதனை இலங்கைக்கு கடத்த வாய்ப்புள்ளதாகக் கருதி, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்தபோது, யாரும் முறையான பதில் கூறாததால், மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்தநாள் விழா: போதையில் நண்பரை கொலை செய்தவர் கைது