ராமநாதபுரம் மாவட்டம், காய்கறி சந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் வியாபாரி மணிகண்டன். இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஊரடங்கால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பொது மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வியாபாரி மணிகண்டன் இன்று (ஜூன்.6) கர்நாடக மாநிலத்திலிருந்து 15 டன் தக்காளிகளை இறக்குமதி செய்தார். பொது மக்களுக்கு உதவும் வகையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் இருக்கக்கூடிய ஐந்தாயிரம் குடும்பங்களுக்குத் தலா 2 கிலோ வீதம் பேக் செய்து, 10 ஷேர் ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று கொடுத்து வருகிறார்.
இந்தச் செயலை அப்பகுதி பொது மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
15 டன் தக்காளியை இலவசமாக வழங்கிய வியாபாரி! இதுதொடர்பாக செய்தியார்களிடம் மணிகண்டன் கூறுகையில்,’’ கடந்த மூப்பது ஆண்டு காலம் பொது மக்கள் ஆதரவுடன் நான் மார்க்கெட்டில் காய்கறி கடையை நடத்தி வருகிறேன். தற்போது ஊரடங்கால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் பொது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, தன் தொழில் சார்ந்த ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், வாடகைக்கு ஆட்டோ எடுத்து பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று 2 கிலோ தக்காளியைக் கொடுத்து வருகிறேன். இது எங்கள் குடும்பத்திற்கு மன மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
வியாபாரி மணிகண்டன், கடந்தாண்டு கரோனாவால் அவதிப்பட்டு வந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கியத் தொகுப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தர்மபுரி ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!