ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் மீன்பிடித்தொழில் ஈடுபட்டால், பெண்கள் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். பாசி வளரப்பில் சாதனைப் படைத்தும், ஒரு தொழில் முனைவோராகவும் உருவெடுத்துள்ளார் பாம்பன் தெற்குவாடி பகுதியைச் சேர்ந்த சுகந்தி(35) என்ற பெண்மணி. இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயாக உள்ள இவர், ராமேஸ்வரம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.
மரிக்கொழுந்து, கஞ்சி , கட்ட கோரை போன்ற பாசிகளைச் சேகரிக்கும் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக தனது தாயுடன் இணைந்து செயல்பட்ட இவருக்கு, ஒரு வெளிச்சத்தை காட்டியிருக்கிறது ராஜம்மாள் கல்லூரி. அந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் இவருக்கும், இவர் பகுதி பெண்களுக்கும் ஜிகர்தண்டா, ஜெல்லி, அல்வா போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படும் பெப்சி பாசி வளர்ப்பு குறித்தும் சந்தையில் அவ்வகை பாசிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியுள்ளனர்.
சிப்பி அலங்காரம், கடல்பாசி வளர்ப்பு என அசத்தும் ராமநாதபுரம் பெண்மணி சுகந்தி குறித்த செய்தித்தொகுப்பு இதைத்தொடர்ந்து பெப்சி பாசி வளர்ப்பில் ஈடுபட்ட அவர், ஒரு குறிப்பிட்ட வருமானத்தையும் அதன்மூலம் ஈட்டிவருகிறார். அதோடு, சுனாமி பாதிப்புக்குப் பிந்தைய வாழ்வாதாரம் எனும் திட்டத்தின் கீழ் அலங்காரப்பொருள்கள் செய்யக் கற்றுக்கொண்டு சிப்பிகளை சேகரித்து அலங்காரப் பொருள்கள் செய்து ஆன்லைன் விற்பனை மூலமும் வருமானம் ஈட்டிவருகிறார்.
"பெப்சி பாசி வளர்ப்புக்கு முன்புவரை வருடத்தில் நாங்கள் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே பாசி சேகரிப்பில் ஈடுபடுவோம். ஆனால், தற்போது மூங்கில்களை சதுரமாக கட்டி அதில் பெப்சி பாசிகளை வளர்த்து ஆண்டு முழுவதும் பெப்சி பாசி சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறோம். இதனால், வருடம் முழுவதும் எங்களுக்கு வேலையும் இருக்கிறது. நல்ல வருமானமும் இருக்கிறது" என்கிறார் சுகந்தி.
சிப்பியில் அலங்காரப்பொருள்களை தனது குழந்தைகளோடு இணைந்து செய்வதாக கூறும் இவர், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தெற்குவாடி 10ஆவது வார்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வார்டு உறுப்பினர் என்கிற முறையில் தனது வார்டில் மின் விளக்குகள் அமைப்பது, குடிநீர் குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளையும் பொறுப்புடன் செய்துவருகிறார்.
சுகந்தியை எண்ணிப் பெருமைப்படும் அவரது தாய் பஞ்சம்மாள் நம்மிடையே பேசியபோது, "41 ஆண்டுகளாக கடலில் கிடைக்கும் பாசிவகைகளை சேகரித்து விற்பனை செய்துவந்தோம். அதில் சொற்ப வருமானம் மட்டுமே கிடைத்தது. ராஜம்மாள் கல்லூரி பயிற்றுவித்த பெப்சி பாசி வளர்ப்பில் ஈடுபட்டபின்புதான் மாதத்திற்கு 15ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
சிப்பி அலங்காரப் பொருள்கள் செய்யும் சுகந்தி முதலில் 10 பெண்களுடன் இந்த பாசிவளர்ப்பில் ஈடுபட்டுவந்தோம். தற்போது, அவர்கள் பிரிந்து சென்று தனித்தனியாக பாசிவளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் இந்த பெப்சி பாசி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறோம். அதில், முக்கிய நபராக சுகந்தி திகழ்கிறார்" என்றார்.
தாயுடன் வேலையில் ஈடுபடும் சுகந்தி கடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த செய்திகளை மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சமுதாய வானொலியின் நிலைய தலைவர் காயத்ரி, "சுகந்தி கடலோசை 90.4 வானொலியின் சுறுசுறுப்பான நேயர். அவர் பல்வேறு சமயங்களில் எங்களது வானொலிக்கு தொடர்புகொண்டு பல விஷயங்களைச் செய்துவருவதாக என்னிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் அவரிடம் தொலைபேசியில் பேசியபோது அவர் சிப்பிகள் கொண்டு அலங்காரப் பொருள் செய்வது குறித்து சொன்னார். அதை எடுத்துவரச் சொல்லி நான் பார்த்தேன். அவருடைய வேலைப்பாடுகள் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
பெண்கள் தலைக்கு அணியும் கிளிப், காதணிகள், முகம் பார்க்கும் கண்ணாடி, சிப்பி பொக்கே, தோடு வகைகள் உள்ளிட்ட பலவகையான அலங்காரப் பொருள்களை செய்திருந்தார். அதன் புகைப்படங்களை எங்கள் வானொலியின் இணையப்பக்கத்தில் வெளியிட்டு எங்களால் முடிந்த ஆதரவை அவருக்கு வழங்கிவருகிறோம். பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தாயுடன் பாசி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சுகந்தி அவர் வார்டு உறுப்பினராக இருக்கிறார் என்ற கூறியது மேலும், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது" என்றார். சுகந்தி இக்காலத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் பெரிய பெண் தொழில்முனைவோராக ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் மாங்குரோவ் காடுகள்