முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வளரும் குழந்தைகள் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி, அதில் பப்ஜி, கிரிக்கெட் உள்ளிட்ட கேம்களை வீட்டில் இருந்தே விளையாடி பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதைத் தவிர்த்தனர்.
இதை நினைவூட்டி அதை மீட்டெடுக்கும் முயற்சியில், ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் உள்ள வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மறந்து போன 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட வைத்து, அதன் அறிவியல் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்து அசத்தினார்கள்.
இதில், பாரம்பரிய விளையாட்டுகளான பாண்டி, பல்லாங்குழி, நொண்டி, கில்லி, பச்சக் குதிரை, காவியம் மணிக்காவியம், கோலி குண்டு, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை, விளையாடி விளையாட்டின் நோக்கம் குறித்தும் அறிந்து மகிழ்ந்தனர்.