ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை என நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்து. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
வருகின்ற மே 2️ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது,"வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகளும் , தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேசைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப்படும்.