ராமநாதபுரம் சாயல்குடி அருகே நரிப்பையூர் தரவைப்பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்த தொற்று நோயை உலகளவில் ஒப்பிட்டால் தமிழ்நாடு கட்டுப்படுத்தியது. அதற்கு காரணம் அதிமுக அரசு. திண்டுக்கல்லில் இரண்டு கைகளை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் உயிரிழந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை படைத்தனர். அப்படிப்பட்ட மருத்துவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.
அதிமுக அரசு ஏழை மக்கள் தங்களது சொந்த ஊரிலேயே மருத்துவம் பார்க்கும் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 மினி கிளினிக்குகளைக் கொண்டுவரவுள்ளது. இதில் முதுகுளத்தூரில் மட்டும் 12 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”வேளாண் உற்பத்தியில் தேசிய விருது பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதுமட்டுமல்ல உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியளித்தார். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தால் இன்னும் 4 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை போல் விவசாயம் பெருகும்.