ராமநாதபுரம் மாவட்டம், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஆட்சியர் பேசுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவிற்காக ஆயிரத்து 647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக எட்டாயிரத்து 305 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 25) இரண்டாம்கட்டப் பயிற்சியும், ஏப்ரல் 5ஆம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.