ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த 50 தினங்களாக சிபிசிஐடி காவல் துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில் குற்றவாளிகள் தற்போது வரை கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்காதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (மார்ச். 13) காலை வேங்கை வயல் கிராமத்தில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் நான்கு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் மனிதக்கழிவுகள் கலந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தையும் மாவட்ட ஆட்சியர் இங்கு வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கீழே இறங்குவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த மாவட்டம் பொறுப்பாளர் நியாஸ் உள்ளிட்டோர் வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கீழே இறங்கச் சம்மதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நான்கு பேரும் கீழே இறங்கினர். பின்னர், போராட்டத்தில் ஈட்டுப்பட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில் அந்த பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியூர் ஆட்களை பட்டியல் இனத்து மக்கள் அழைத்து வந்து இது போன்ற போராட்டங்களில் ஈடுபடு வைப்பதாகவும், குற்றவாளிகளை காவல் துறைக்கு அடையாளம் தெரிந்தும் இதனால் வரை அவர்களை காவல் துறையினர் கைது செய்யவில்லை என்றும் எங்களை குற்றவாளிகள் போல் காவல் துறையினர் சித்தரித்து வருவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.