மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாதாகவும், அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது மனைவி தனது மகள், மகன் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கன்னியான்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (49). இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், அனிதா (22) என்ற மகளும், இன்பராஜ் (8) என்ற மகனும் உள்ளனர். சண்முகராஜ், கடந்த 10 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் ஷிகாத் என்ற இடத்தில் உள்ள Red Sea Gateway Terminal என்ற நிறுவனத்தில் Tower Crane Operator-ஆக பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க:வெளிநாட்டில் வேலை என பலரிடம் மோசடி; தாய் மீது மகன் மாவட்ட ஆட்சியரிடம் சென்ற புகார்
கடந்தாண்டு விடுமுறையின் போது கூட புதுகோட்டையில் உள்ள சொந்த ஊருக்கு வந்துவிட்டு, அதன் பின் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு பணியை தொடர சென்றுள்ளார். இந்த நிலையில் மார்ச் 25 ஆம் தேதி இரவு தங்கும் அறையின் கழிவறையில் சண்முகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் அவர் வேலை செய்து வந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சண்முகராஜின் மனைவி அஞ்சலை, மகள் அனிதா, மகன் இன்பராஜ் மற்றும் உறவினர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, சவுதியில் தற்கொலை செய்து கொண்ட தனது கணவர் சண்முகராஜின் உடலை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்குரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் மனுவாக எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சண்முகராஜின் உறவினர்கள் கூறுகையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதற்கு முந்தைய நாள் வரை அவர் தனது குடும்பத்தாருடன் வழக்கம் போல பேசியுள்ளார்.
அனைவரிடமும் நலம் விசாரித்துள்ளார். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி வந்துள்ளது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவிக்கின்றனர். முன்னதாக, அவரது மனைவி மற்றும் மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழுதபடியே வந்ததிருந்ததும், வளாகத்திலேயே அழுது கதறியதும் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி - பாதிக்கப்பட்டோர் மறியல்