புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, அம்மன்பேட்டையில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் நேற்று (செப்.27) திறந்து வைத்தார். இதையடுத்து, மேலூரில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூட கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில், கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ”தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பொது மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வயதானவர்கள், இதர பாதிப்புகள் உள்ளவர்கள் ஆகியோர் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா அறிகுறி உடையவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைய அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவர்களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிது" என்றார்.