புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை அருகேயுள்ள தைலாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது பகுதியில் முறையான சாலை வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று கூறி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, 'எத்தனை முறை மனு அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது சுதந்திர நாடா? உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்கள் பகுதி மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம்' என்றார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை அழைத்து பிரச்னையைக் கேட்டறிந்தார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுத்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்.